ஆட்டோவை புக் செய்து பயணம்: நடுவழியில் டிரைவரை பதறவைத்த திருடர்கள்!

By ரஜினி

புழல் அருகே ஆட்டோவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பயணிகளுடன் சென்ற மற்றொரு ஆட்டோவை மறித்தபோது சாலையில் இருந்த சுவரின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை புழல் பாளையம் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் இளையக்குமார்(38). இவர் ராபிட்டோ நிறுவனத்தில் இணைந்து ஆட்டோவை ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு வாலிபர்கள் ராபிட்டோ செயலி மூலம் திருவிக நகரில் இருந்து புழல் செல்ல ஆட்டோ புக்கிங் செய்தனர்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் இளையக்குமார் திருவிக நகரில் ஆட்டோ புக்கிங் செய்த இருவரையும் ஏற்றிக்கொண்டு புழலுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆட்டோ ஜிஎன்டி (மாதவரம்-புழல்) சாலை வழியாக சென்றபோது ஆட்டோவில் பயணம் செய்த இருவரும் ஆட்டோவை நிறுத்துமாறு கூறினர். அதற்கு டிரைவர் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை சரமாரியாகத் தாக்கினர். பயந்து போன டிரைவர் இளையக்குமார் ஆட்டோவை சாலையோரம் நிறுத்தினார். அப்போது வந்தவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டோ டிரைவரை மிரட்டி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். உடனே டிரைவர் இளையக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் ஆத்திரமடைந்த இருவரும் எதிர் முனைக்குச் சென்று அவ்வழியாக வந்த ஆட்டோவை கத்தி முனையில் வழிமறித்து நிறுத்தினர். இந்த ஆட்டோவை கோவிந்தராஜ் என்பவர் ஓட்டிவந்தார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீதும் மோதி கவிழ்ந்தது. பின்னர் அந்த நபர்கள் கத்தியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் கோவிந்தராஜ், மற்றும் பயணிகள் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற புழல் போலீஸார் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராப்பிடோ செயலியில் ஆட்டோ புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட புழல் என்எஸ்கே தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23), வியாசர்பாடி கரிமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(23) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE