`இரவில் தனியாகச் செல்ல வேண்டாம், பைக்கில் ஏறுங்கள்’- ஐஐடி மாணவியை டார்ச்சர் செய்த வாலிபர் கைது

By ரஜினி

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம், ’இரவு நேரத்தில் தனியாகச் செல்ல வேண்டாம், பைக்கில் ஏறுங்கள்’ எனக் கூறினாராம். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். அந்த நபர் தொடர்ந்து மாணவியை பைக்கில் ஏறுமாறு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். பின்னர் அந்த இடத்தைவிட்டு கிளம்பிச் சென்றார்.

வாலிபரின் செயலால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, உடனே அருகில் இருந்த காவலாளியிடம் வாலிபர் தவறாக நடக்க முயற்சித்தது குறித்து தகவல் தெரிவித்தார்.

இந்தத் தகவலின் பேரில் ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஏற்கெனவே ஐ.ஐ.டியில் பெயின்டராக பணியாற்றி வந்த வசந்த் எட்வர்ட்(30) என்பவர் போதையில் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்த் எட்வர்டை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE