கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை:14 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

By KU BUREAU

கேரளாவில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட்டும், நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் புயல் அலையும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசாவை மையம் கொண்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்து இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இதனால் கண்ணூர் மற்றும் காசர்கோடு கடற்கரையோரங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். நாளை இரவு 11.30 மணி வரை கேரள கடற்கரையில் 2.5 முதல் 3.4 மீட்டர் உயரத்திற்கு அலை எழும், மேலும் புயல் அலையும் வீசக்கூடும்.எனவே, இப்பகுதி மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், வயநாடு மாவட்டத்தில் இன்று மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்லூரிகள், அங்கன்வாடிகள், டியூசன் சென்டர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருப்பினும், முன் திட்டமிடப்பட்ட தேர்வுகள் மற்றும் பிஎஸ்சிதேர்வுகள் நடைபெறும். மாடல் ரெசிடென்ஷியல் (எம்ஆர்எஸ்) மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் மற்றும் திருச்சூரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என பரப்பப்படும் செய்தி தவறானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE