மகாராஷ்டிரா தேர்தல்: மகா விகாஸ் அகாதியில் 7 தொகுதிகளுக்கு அடிபோடும் சமாஜ்வாதி கட்சி

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 7 தொகுதிகளை கேட்டுப் பெறும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறது.

மகாராஷ்டிராவில் 288 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. அம்மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ், தேசியவாத் காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு), சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மக்களவைத் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது பேரவைத் தேர்தல் ஜுரம் சூடிபிடிக்கத் துவங்கியுள்ளது. அதன்படி மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 7 தொகுதிகளை கேட்டுப் பெறும் நோக்கில் காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்கட்சியின் மகாராஷ்டிர தலைவர் அபு அசிம் ஆஸ்மி கூறுகையில், சமாஜ்வாதி கட்சியின் 35 எம்பி-க்கள் நாளை மும்பைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் கூட்டணியில் சமாஜ்வாதி கேட்டுப் பெறும் இடங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பதிலளித்த அபு அசிம் ஆஸ்மி , "2014ல் நாங்கள் 7 இடங்களைக் கேட்டோம். இந்த முறை அதை விட அதிகமாக இருக்கும்.

நாங்கள் அகிலேஷ் யாதவிடம் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளோம். இதுகுறித்து அவர் முடிவு செய்வார். எம்பி-க்கள் எண்ணிக்கையில் நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம்.” என்றார்.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகாராஷ்டிராவுக்கு நாளை வரவிருக்கும் சமாஜ்வாதி கட்சி எம்பி-க்கள், மணிபவன், சைத்யபூமி, சித்திவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து மும்பை பாந்த்ராவில் உள்ள ரங்ஷர்தாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE