’குவார்ட்டர் அருந்துபவர்களைக் கைதுசெய்யாதீர்’!

By ஆர். ஷபிமுன்னா

பிஹாரில் மதுவிலக்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், குவார்ட்டர் அளவு மது அருந்துபவர்களைக் கைதுசெய்யக் கூடாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பிஹாரில் கடந்த 2016 ஏப்ரல் 16 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன்படி, இம்மாநிலத்தில் மது அருந்துவது, தயாரிப்பது, சேமிப்பது, விற்பது, விலைக்கு வாங்குவது ஆகிய அனைத்துக்கும் தடை உள்ளது. ஐஎம்எப்எல் எனப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, சுமார் 80 சதவீதத்தினர் பூரண மதுவிலக்கிற்கு ஆதரவளித்தனர். பெண்களின் பேராதரவுடன் மதுவிலக்கு தொடரும் நிலையில், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மது அருந்தி சிக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன், கள்ளச்சாராய மரணங்களும் அரசுக்கு நெருக்கடியை அளித்திருக்கின்றன.

இதற்கிடையே, பிஹாரின் பூரண மதுவிலக்கு முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாகவும், இந்த உண்மையை நிதீஷ் அரசு ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் ஆலோசனை நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, ‘குவார்ட்டர் அளவு வரையிலான மது அருந்துவோருக்கு, அபராதம் விதிப்பதும் சிறை தண்டனை அளிப்பதும் கூடாது’ என சமீபத்தில் மாஞ்சி கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், நேற்று டெல்லி வந்திருந்த அவர் இது குறித்து கூறும்போது, “பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தைப் போலவே பிஹாரின் நிலையும் உள்ளது. பெரிய மனிதர்களும், வியாபாரிகளும் தப்பிவிட, ஏழைகள் இதில் சிக்குகின்றனர். மது அருந்துவதைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பலநேரம் தவறாகக் காண்பிக்கின்றன. இதனால், குவார்ட்டர் அளவில் மது அருந்துவோரை அனுமதித்து அவர்கள் மீது அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கக் கூடாது. தற்போது மது வழக்கில் சிக்கி சிறையிலிருப்பவர்களில் 70 சதவீதத்தினர் அரை லிட்டரும் அதற்கு குறைவான அளவிலும் மது அருந்தியவர்கள். எனவே, பிஹாரின் பூரண மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவரான மாஞ்சி, ஆளும் மெகா கூட்டணியின் உறுப்பினர். இதனால், அவரது இந்தப் பேச்சுக்குக் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

இதற்கிடையே, இரண்டு தினங்களுக்கு முன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் நிதீஷ் குமார், “மது அருந்துவோரை விட அதை சட்ட விரோதமாகத் தயாரிப்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும் முதலில் தேடிபிடித்து கைது செய்ய வேண்டும். இதற்காக, மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பது பொருள் அல்ல. பூரண மதுவிலக்கு சட்டத்தில் இனி எந்த மாற்றமும் செய்யப்போவது கிடையாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிஹாரில் பூரண மதுவிலக்கு அமலான பின் அதற்கான சட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக, முதல்முறையாக மது அருந்தி சிக்குவோரிடம் 50,000 ரூபாய் அபராதம் வசூலிப்பும், கட்ட மறுத்தால் ஒரு மாதம் சிறை தண்டனையும் இருந்தன. இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இது 2,000 முதல் 5,000 ரூபாய் வரை எனக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE