9 நாட்களுக்கு பிறகு கால்வாயில் இருந்து சிக்கிம் முன்னாள் அமைச்சர் சடலம் கண்டெடுப்பு

By KU BUREAU

காங்டாக்: சிக்கிம் மாநிலம் பாக்யாங் மாவட்டத்திலுள்ள சோட்டா சிங்டாம் நகரைச் சேர்ந்தவர் ராம் சந்திர பவுட்யால். கட்சி ஆதரவாளர்கள் இவரை ஆர்.சி. பவுட்யால் என்று அழைத்து வந்தனர். 1970-களில் ரைசிங் சன் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

சிக்கிமில் அமைந்த பல்வேறுஅமைச்சரவைகளில் இவர் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். சிக்கிம் மாநில பேரவை துணைத் தலைவர், வனத்துறை அமைச்சர் என பல பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை என்று சோட்டா சிங்டாம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே, இவரது உடல்நேற்று மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகிலுள்ள புல்பாரிபகுதியிலுள்ள டீஸ்டா ஆற்றின்கால்வாயில் மிதந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாயமான 9 நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிஒருவர் கூறும்போது, “ஆற்றின் நீரில் சடலம் அடித்து வரப்பட்டுள்ளது. சடலத்தில் இருந்த ஆடைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றை வைத்து அவர் சிக்கிம் முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பவுட்யால் என்பதைக் கண்டறிந்தோம். அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

இந்நிலையில் ஆர்.சி. பவுட் யால் மறைவுக்கு சிக்கிம் மாநில முதல்வர் பி.எஸ். தமங் இரங்கல் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE