அஜித் பவார் கட்சியில் இருந்து 4 மூத்த தலைவர்கள் விலகல்

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2023-ம் ஆண்டு அஜித் பவார் தலைமையில் சிலர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கினர். இந்தக் கட்சி பாஜக.வுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் பாஜக, அஜித்பவார் அணி பங்கேற்று ஆட்சி அமைத்தது. இதில் அஜித் பவார் துணை முதல்வரானார்.

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா வின் பிம்பிரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 4 மூத்த தலைவர்கள் நேற்று அஜித் பவார் அணியில் இருந்து விலகினர். பிம்பிரி சின்ச்வாட் பகுதி தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) தலைவர் அஜித் கவ்கானே, மாணவர் பிரிவு தலைவர் யாஷ் சனே, ராகுல் போஸ்லே, பங்கஜ் பலேகர் ஆகிய 4 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை அஜித் பவாரிடம் அளித்துள்ளனர். கட்சியில் இருந்து விலகிய 4 பேரும் விரைவில் சரத் பவார் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அஜித் பவார் போட்டியிட்டார். ஆனால், ராய்காட் தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. அதேவேளையில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE