காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது: அமித் ஷா தாக்கு

By KU BUREAU

மகேந்திரகர்: காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலம், மகேந்திரகரில் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சம்மான் சம்மேளனம்' நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது, "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவதற்காக 1950-களில் அமைக்கப்பட்ட காக்கா காலேகர் ஆணைய பரிந்துரைகளை, காங்கிரஸ் பல ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. 1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் பரிந்துரையை கிடப்பில் போட்டார். 1990ல் அது ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ராஜீவ் காந்தி இரண்டரை மணி நேரம் உரை நிகழ்த்தி, ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.

கர்நாடகாவில், காங்கிரஸ், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் இங்கு (ஹரியாணாவில்) ஆட்சிக்கு வந்தால் இங்கேயும் அதுதான் நடக்கும். ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஹரியாணாவில் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்.” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 15 நாட்களில் ஹரியாணாவுக்கு அமித் ஷா வருவது இது இரண்டாவது முறையாகும். கடைசியாக கடந்த ஜூன் 29ம் தேதி அன்று, பஞ்ச்குலாவில் நடைபெற்ற கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அமித் ஷா உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE