புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர், லடாக் தலைமை நீதிபதி எச்.என். கோடீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர், லடாக் தலைமை நீதிபதி எச்.என். கோடீஸ்வர் சிங், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி ஜம்மு - காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எச்.என்.கோடீஸ்வர் சிங், பிப்ரவரி 15ம் தேதி பதவியேற்றார்.
இவர் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது பெயரை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கடந்த 12ம் தேதி அன்று ஒருமனதாக பரிந்துரைத்தது.
மணிப்பூரின் இம்பாலில் 1963 மார்ச் 1ல் பிறந்த நீதிபதி கோடீஸ்வர் சிங், மணிப்பூரின் முதல் அட்வகேட் ஜெனரலாகவும், கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய என்.இபோடோம்பி சிங்கின் மகனாவார். 2008ல் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்ட கோடீஸ்வர் சிங், 2011ல் கவுகாத்தி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
» பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு
» 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
அதைத் தொடர்ந்து கடந்த 2012ல் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மணிப்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2013ல் நிறுவப்பட்டபோது அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி கோடீஸ்வர் சிங் நியமனத்தின் மூலம், மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, மணிப்பூர் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு தனது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 1989ல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஆர்.மகாதேவன் கடந்த 25 ஆண்டுகளாக மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் கவனம் செலுத்தி சிவில், கிரிமினல் மற்றும் ரிட் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். 2013ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.