ஜம்முவில் பயங்கரவாதிகளால் தொடரும் சோகம்: 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

By KU BUREAU

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று, பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு அதிகாரி உட்பட நான்கு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 32 மாதங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டம், தேசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் பணியில் இறங்கின. அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஓர் அதிகாரி உள்பட மொத்தம் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 32 மாதங்களில் மட்டும் 48 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கடந்த ஜூலை 8ம் தேதி கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 வீரர்கள் காயமடைந்தனர். கடந்த ஜூன் 11, 12ம் தேதிகளில் நடந்த இரட்டை தாக்குதல்களில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஜூன் 9ம் தேதி, ரியாசியில் ஆன்மிக பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர். கடந்த மே 4ம் தேதி, பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை வாகனம் உள்பட இரண்டு வாகனங்கள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இந்திய விமானப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

இதுபோன்று கடந்த 32 மாதங்களில் ஜம்மு பிராந்தியத்தில் 48 ராணுவ வீரர்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள சூழலை ஆராய்வதற்கு கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை, ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE