உணவு விநியோக நிறுவனங்கள் மூலம் மதுபானம் வீட்டுக்கே விநியோகமா? வெளியான புதிய தகவல்

By KU BUREAU

புதுடெல்லி: பிரபல இணைய வழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி, ஸொமாட்டோ மற்றும் பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்கள் விரைவில் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை விநியோகிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி, ஸொமாட்டோ மற்றும் பிக் பேஸ்கட் போன்ற விநியோக தளங்கள் மூலம் விரைவில் பீர், ஒயின் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் ஆர்டரின்பேரில் விநியோகம் செய்ய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது டெல்லி, கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இது தொடர்பான திட்டங்களை ஆராய்ந்து வருகின்றன என 'எகனாமிக் டைம்ஸ்' செய்தி தகவல் தெரிவிக்கிறது.

இந்த நடவடிக்கையின் சாதக, பாதகங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என சம்பந்தப்பட்ட தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மதுபானத்தை வீடுகளுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அந்த செய்தி தகவலில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகி கூறுகையில், "இது குறிப்பாக பெரிய நகரங்களில் அதிகரித்து வரும் வெளிநாட்டினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாகும். மேலும் உணவுடன், மிதமான மதுவை விரும்பும் நுகர்வோர் மற்றும் மதுகடைகளின் முன் நின்று வாங்குவதை தவிர்க்க விரும்பும் பெண்கள், மூத்த குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகும்" என்றார்.

ஸ்விகி கார்ப்பரேட் விவகாரங்கள் துணைத் தலைவர் டிங்கர் வசிஷ்ட் கூறுகையில், “இணைய வழி விநியோகத்தில் பரிவர்த்தனை பதிவுகள், வயது சரிபார்ப்பு மற்றும் வரம்புகளை உறுதி செய்கின்றன. இணைய தொழில்நுட்ப அமைப்பு, ஒழுங்குமுறை மற்றும் கலால் தேவைகளை உறுதி செய்கின்றன.

உதாரணத்துக்கு நேரம், மதுவிலக்கு நாட்கள், மண்டல விநியோக வரம்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன" என்றார். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் கரோனா பொது முடக்கத்தின்போது மது விநியோகம் கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது.

மேற்கு வங்கம், ஒடிசாவில் இணையவழி விநியோகமானது, மது விற்பனையில் 20 முதல் 30 சதவிகத விற்பனை உயர்வுக்கு வழி வகுத்துள்ளதாக சில்லறை வணிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE