கடையின் மாடியில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 3 பழங்காலச் சிலைகள் பறிமுதல்!

By ரஜினி

மதுரையில் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த 3 பழங்காலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை வடக்கு சித்திரைத் தெருவில் உள்ள காட்டேஜ் எம்போரியம் என்ற கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பெற்று தமிழகச் சிலை கடத்தல் பிரிவு தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது கடையின் மாடியில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 3 பழங்காலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக சிவ பார்வதி சிலை, பெண் உருவ கல் சிலை, புத்தரின் தலை சிலை ஆகிய 3 பழங்கால உயர் மதிப்புள்ள சிலைகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 3 சிலைகளும் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பால வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டதாக இருக்கலாம் எனவும், சிலைகளை ஒடிசா, ஆந்திரா அல்லது மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள கோயில்களில் இருந்து திருடியிருக்கலாம் எனவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கு உண்டான ஆவணத்தை காட்டேஜ் எம்போரியம் உரிமையாளர் ஜாகூர் அகமது சர்கார் சமர்ப்பிக்கத் தவறியதால் சிலைகளை பறிமுதல் செய்து வேறு மாநில சிலைகள் தமிழகத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 3 சிலைகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE