கொடிகட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் தொழில்: பெங்களூருவை என்ஆர்ஐகள் விரும்ப காரணம் இதுதான்!

By KU BUREAU

பெங்களூரு: பெங்களூருவில் வீடு வாங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெகுவாகவே விரும்புகிறார்கள். இதன் காரணமாக இந்த நகரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரியஸ் எஸ்டேட் தொழில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கே நிலத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீடு அல்லது மனை வாங்குவதற்கு பிடித்தமான நகரமாக மாறி வருகிறது. இங்கு சொத்து வாங்குபவர்களை விட முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

பெங்களூருவில் வீடு அல்லது சொத்து வாங்கும் பெரும்பாலான என்ஆர்ஐக்கள் குறைந்த மற்றும் நடுத்தர விலை சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர். இரண்டு படுக்கையறை குடியிருப்புகள் அல்லது சிறிய மூன்று படுக்கையறை அடுக்கு மாடி குடியிருப்புகள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் பெரிய பணக்காரர்களாக இல்லாத இந்த என்ஆர்ஐக்கள் தங்கள் சேமிப்பை இந்த வீடுகளில் முதலீடு செய்கிறார்கள்.

பெங்களூருவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீடு வாங்குவதற்கான முக்கியமான காரணம் வீட்டு வாடகை அதிகம் என்பது தான். அத்துடன் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக இருப்பதுடன், பாதுகாப்பான இடம், நல்ல காலநிலை, காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம், வணிக ரீதியாக நகரின் வளர்ச்சி என பல காரணங்களும் உள்ளன. இதன் காரணமாகவே பெங்களூரு என்ஆர்ஐ-களை ஈர்க்கிறது. முதலீட்டுக்காக வீடு வாங்கினாலும், ஓய்வு பெற்று நாடு திரும்பினால், பெங்களூருவை வசிப்பிடமாக மாற்றும் எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம்.

ஐ.டி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகளவில் வீடுகளை வாங்குகின்றனர். நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒயிட்ஃபீல்டு, சர்ஜாபூர் சாலை; வடக்கே தனிசந்திரா, தேவனஹள்ளி, ஹெப்பாலா; தெற்கு பகுதியில் உள்ள கனகபுரா சாலைப் பகுதிகளில் என்ஆர்ஐ.க்கள் வீடுகள் வாங்குவது அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE