சரத் பவாருடன் அஜித் பவார் ஆதரவு அமைச்சர் திடீர் சந்திப்பு - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு!

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் ஆதரவு அமைச்சர் சகன் பூஜ்பால், சரத் பவாரை திடீரென சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், அந்த கூட்டணி கடும் தோல்வியை சந்தித்துள்ளது.

குறிப்பாக சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இந்தியா கூட்டணியில் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்ட நிலையில், இக்கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.

இதன் காரணமாக பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் எதிர்ப்பு குரல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக 40 எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்த அஜித் பவாருக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தற்போது உணவுத்துறை அமைச்சராக உள்ள அஜித் பவார் பிரிவு மூத்த தலைவர் சகன் பூஜ்பால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார். அவர் நாசிக் தொகுதியில் இருந்து போட்டியிட ஆர்வம் காட்டிய நிலையில், அந்த தொகுதி கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனிடையே மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கலாம் என்று அவர் எதிர்பார்த்து இருந்த நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பூஜ்பால் கடுமையான அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்த பூஜ்பால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த ஜூலை மாதம் அஜித் பவார் கட்சியிலிருந்து விலகிய போது 40 எம்எல்ஏக்களில் ஒருவராக பூஜ்பாலும் அவருடன் கட்சியிலிருந்து வெளியேறினார்.

தற்போது தனக்கான முக்கியத்துவம் தொடர்ந்து குறைந்து வருவதால், அஜித் பவார் தலைமையிலான கட்சியிலிருந்து விலகி, அவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை இன்று அவரது வீட்டில் பூஜ்பால் சந்தித்து பேசி உள்ளார். இதனால் அவர் மீண்டும் சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE