தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிகூட ஆட்சிக்கு வந்துவிடும் போலிருக்கிறது. ஆனால், பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பது மட்டும் காலத்துக்கும் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது!
பழங்குடிகளில் ஒரு பிரிவினர் தான் சோலகா சமூகத்தினர். வயிற்றுப் பிழைப்புக்காக தங்கள் உடம்பில் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு வருத்தி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சமூகத்தில் பிறந்தவர் தான் ஈஸ்வரி. குடும்ப வறுமைக்கு மத்தியிலும் முதுகலை ஆங்கிலம் வரைக்கும் படித்து முடித்திருக்கிறார். தனது சமூகத்தில் முதன் முதலாக முதுகலை படித்த பெண் என்ற பெருமைக்கும் இவர் இப்போது சொந்தக்காரர். முதுகலை வரை முடித்துவிட்டாலும் பழங்குடி சான்றிதழ் பெறுவதற்காக இவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியும் இன்னமும் இவருக்குச் சான்றிதழ் கிடைத்தபாடில்லை. அந்தக் கதையைத் தெரிந்து கொள்ளும் முன்பாக ஈஸ்வரியின் குடும்பத்தை பற்றி சின்னதாய் ஒரு அறிமுகம்.
மதுரையைச் சேர்ந்த முனியாண்டி - பழனியம்மாள் தம்பதியின் மகள் தான் ஈஸ்வரி. வாழையடி வாழையாய் சாட்டையால் அடித்து உடம்பை வறுத்தி பிழைக்கும் முனியாண்டிக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவர் தான் ஈஸ்வரி.
பெரும் படிப்பெல்லாம் படிக்கவைக்கும் அளவுக்கு வசதி இல்லாதவர் என்பதால் ஐந்தாம் வகுப்போடு மகள் ஈஸ்வரியின் படிப்பை நிறுத்திவிட்டு அவரையும் சாட்டையடிக்கும் தொழிலுக்கு இழுத்துச் சென்றுவிட்டார் முனியாண்டி. ஆனால், நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளை என்பதால் ஆசிரியர்கள் விடவில்லை. முனியாண்டியிடம் பேசி ஈஸ்வரியை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். அப்படியும் பத்தாம் வகுப்போடு போதும் என்ற மன நிலையில் தான் முனியாண்டியும் அவரது மனைவியும் இருந்தார்கள். இல்லையென பிடிவாதம் பிடித்து 12-ம் வகுப்பையும் முடித்தார் ஈஸ்வரி.
மகள் அத்தோடு விட்டுவிடுவாள் என நினைத்தார் முனியாண்டி. ஆனால் ஈஸ்வரியோ, கல்லூரிக்குப் போயே ஆவேன் என உண்ணாமல் பட்டினி கிடந்தார். மகளின் பிடிவாதத்தால் அரசுக் கல்லூரியில் சேர அப்ளிகேஷன் வாங்கிக் கொடுத்தார் முனியாண்டி. அரசுக் கல்லூரியில் ஈஸ்வரிக்கு விரும்பிய பாடம் கிடைத்தது. ஆனால், பழங்குடி என்பதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பிக்க முடியாமல் போனதால் கடைசி நேரத்தில் அரசுக் கல்லூரி அட்மிஷன் கைவிட்டுப் போனது.
“எப்படியாச்சும் பிரைவேட் காலேஜ்லயாச்சும் என்னைய சேர்த்துவிடுங்கப்பா” என கெஞ்சிய மகளை முனியாண்டியால் மறுதலிக்க முடியவில்லை. கடன்பட்டு மகளை சுயநிதிக் கல்லூரியில் சேர்த்தார். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து நன்றாகவே படித்தார் ஈஸ்வரி. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுக்குப் பணம் கட்ட தனது பழைய டூ வீலரை விற்றார் தகப்பன் முனியாண்டி. இளங்கலையும் படித்து முதுகலையும் முடித்த ஈஸ்வரி, இப்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலையில் இருக்கிறார். ஆனால், இன்னமும் சாதி சான்றிதழ் அவரது கைக்குக் கிடைத்தபாடில்லை.
இந்தக் கதையை ஆதங்கத்துடன் நம்மிடம் விவரித்த ஈஸ்வரி, “எங்க தாத்தா காலத்துலருந்தே எங்க குடும்பத்துல யாருக்கும் சாதி சான்றிதழ் இல்லை. அவங்க படிக்கலைன்றதால அதோட அவசியம் இல்லாமப் போச்சு. ஆனா, எங்க தலைமுறை படிக்க ஆரம்பிச்சுட்டோம். எங்களுக்கும் இதுவரைக்கும் சாதி சான்றிதழ் கிடைக்கல. என்னோட பிடிவாதத்தால தம்பியும் தங்கச்சியும் இப்ப ஸ்கூல் படிப்புல இருக்காங்க. தங்கச்சி பத்தாம் வகுப்பு படிக்கிறா. அவளுக்கு அடுத்த வருஷம் கட்டாயம் சாதி சான்றிதழ் குடுத்தாகணும். அதுக்கு இந்த அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போறாங்கன்னு தெரியல” என்றார்.
கஷ்டப்பட்டு கரையேறிவிட்ட ஈஸ்வரி, தன்னைப் போலவே தனது சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக அவர்களின் பெற்றோரிடம் வீடுதேடிப் போய் பேசினாராம். ஆனால், “கடன் வாங்கிப் படிக்க வைக்கும் நிலையில் நாங்கள் இல்லை” என அவர்கள் ஒரே மாதிரியாய் பதில் சொல்லிவிட்டார்களாம்.
“பிள்ளைகளை படிக்கவைக்கவே வழி இல்லாத நிலையில் தான் எங்கள் சமூகத்தினர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு பழங்குடி சான்றிதழ் கிடைத்தால் அரசுக் கல்லூரிகளில் குறைந்த செலவில் நாங்களும் படித்து முன்னுக்கு வரமுடியும். சான்றிதழ் தரமறுக்கும் அதிகாரிகளுக்கு இதை யார் புரியவைப்பது?” என்று ஆதங்கக் கேள்வி எழுப்பும் ஈஸ்வரி, “எங்கள் சமுதாயத்துக்கு பழங்குடி சான்றிதழ் கொடுப்பது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரை நானே பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் நேரில் மனு கொடுத்தேன். அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை.
இப்போது நான் ஒரு வேலையில் இருந்தாலும் போட்டித் தேர்வு எழுதலாம் என அதற்கான பயிற்சி வகுப்புக்குப் போனேன். ஆனால், போட்டித் தேர்வு எழுதினாலும் சாதி சான்றிதழ் கேட்பார்கள் என்பதால் பாதியிலேயே பயிற்சி வகுப்புக்குப் போவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார்.
சோலகா சமுதாயத்துக்கு மட்டுமல்ல... தமிழகத்தில் பழங்குடி இனத்தின் பல சமூகத்தினருக்கும் அவர்களது வாழ்விடத்தை வைத்து சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டே வருகிறது. மலைகளில் வசித்தால் தான் அவர்கள் பழங்குடிகள் என்ற பிற்போக்கு எண்ணத்திலேயே அரசும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதனால், மலைகளை விட்டு சமவெளிக் குடிகளாக மாறி இருக்கும் பழங்குடிகளுக்கு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான விடியல் அரசை நடத்துவதாகச் சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும்; பழங்குடிகள் வாழ்விலும் விடியல் சேர்க்கட்டும்!