ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை; பரங்கிமலையில் வாலிபர் வெறிச்செயல்: ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

By ரஜினி

போலீஸ்காரரின் மகளான கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்து ‘டார்ச்சர்’ கொடுத்து வந்த வாலிபர், மாணவியை ரயில் முன் தள்ளிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் நிகழ்ந்த இந்தக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம் (47). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி வரலட்சுமி (43) என்ற மனைவியும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி செல்வதற்காக இன்று வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா அங்கு ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ், திடீரென தாம்பரத்தில் இருந்து வந்து மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் சத்யா ரயிலில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த ரயில்வே போலீஸார் சத்யாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷைத் தேடிவருகின்றனர்.

சதீஷ்

சில வருடங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த ராம்குமார் என்ற வாலிபர் குத்திக் கொலை செய்து விட்டு, பின்னர் கைதாகி, புழல் சிறையில் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE