மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒன்பது மண்டலங்கள் மற்றும் 100 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள பிஎஸ்எஃப் அகாடமியின் ரேவதி ரேஞ்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், 2,000 பிஎஸ்எஃப் வீரர்களைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட என்ஆர்ஐகள், 50 பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி வீரர்கள், ஏராளமான பொதுமக்கள், பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், கின்னஸ் புத்தகக் குழுவினரிடம் இருந்து சான்றிதழைப் பெற்றார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஏற்ககெனவே இந்தியாவின் தூய்மையான நகரமாகவும், மத்தியப் பிரதேசத்தின் நிதித் தலைநகராகவும் உள்ள இந்தூர், ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்றார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'ஏக் பைட் மா கே நாம்' பிரச்சாரத்தில் பங்கேற்று இந்தூரில் மரக்கன்றுகளை நட்டார். உலக சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 5-ம் தேதி இந்த பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 140 கோடி மரங்களும், மத்தியப் பிரதேசத்தில் 5.5 கோடி மரங்களும் நடப்படும். இந்த பிரச்சாரத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பல ஆண்டுகளாக நாட்டின் தூய்மையான நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தூரில் 51 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் 24 மணி நேரத்தில் 9,21,730 மரக்கன்றுகள் நடப்பட்டதே இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அதை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் முறியடித்துள்ளளது.