மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்ப்பு: சென்னையில் இருவர் கைது

By ரஜினி

சென்னையில் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில் நேற்று அதிகாலையில் மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி அடுத்தடுத்து 3 பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை செய்ததில், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அபிஷேக்(20, வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து அங்கு சென்று பதுங்கி இருந்த அபிஷேக்கை பிடித்து விசாரித்தனர். அத்துடன் அவரது செல்போனை சோதனை செய்த போது கஞ்சா செடியின் புகைப்படம் இருந்தது. அத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸார் மொட்டைமாடி சென்று பார்த்த போது தண்ணீர் தொட்டிக்கு அருகே மறைவாக மண் தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அபிஷேக்கிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா வாங்கி பயன்படுத்திய போது அதில் உள்ள விதைகளை நட்டு செடியாக வளர்த்து அதனைப் பயன்படுத்தி வந்ததும், பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கஞ்சாவிநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அபிஷேக்(20), அவரது கூட்டாளி சதீஷ் ஆகிய இருவரை யும் போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பில் போலீஸார் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் வீட்டிலே வாலிபர் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE