மக்களவையில் காங்கிரஸ் கொறடாவாக மாணிக்கம் தாகூர் நியமனம்

By KU BUREAU

புதுடெல்லி: மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மக்களவைத் துணைத் தலைவராக கவுரவ் கோகாய் இருப்பார், இந்த முடிவுகள் குறித்த கடிதம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர், தலைமைக் கொறடா மற்றும் இரண்டு கொறடாகள் நியமனம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கவுரவ் கோயாயும், தலைமைக் கொறடாவாக கொடிகுன்னி சுரேஷும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கிருஷ்ணகஞ்ச் எம்.பி. முகம்மது ஜாவேத் ஆகியோர் கொறடாக்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆற்றலுடன் போராடுவார்கள்" இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அதன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அறிவித்தது. பின்னர் அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE