புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புரியில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ‘ரத்ன பண்டார்’ 46 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயிலின் பொக்கிஷ அறையை பகல் 1.28 மணிக்கு சுபா பேலா (நல்ல நேரம்) நேரத்தில் திறந்தனர். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் ராத், ஜெகந்நாதர் கோயில் நிர்வாக குழுவின் தலைமை நிர்வாகி அரபிந்த பாதே, இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் டி.பி. கடநாயக், புரியின் பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதி நிதி உள்ளிட்டோர் இருந்தனர்.
முன்னதாக ரத்ன பண்டாரத்தை திறப்பதற்கு ஒப்புதல் கோரும் ‘அக்னயா’ சடங்கு காலையில் நிறைவடைந்தது. உடன்பிறந்த தெய்வங்களான ஜெகந்நாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகிய கடவுளர்களுக்கு பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் மற்றும் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த விலைமதிப்பற்ற நகைகள் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை, வெளிப்புற அறை (பஹாரா பந்தர்), உள்அறை (பிதாரா பந்தர்) என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர யாத்திரையின் சுனா பேஷா (தங்க உடை) போன்ற சடங்குகளுக்காக 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலின் வெளிப்புற அறை திறக்கப்பட்டாலும், பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ல் திறக்கப்பட்டது.
இதனிடையே, பொக்கிஷ அறைக்குள் பாம்பு நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அரசுக் குழுவினர் கருவூல அறைக்குள் நுழைந்த போது இரண்டு பாம்பு பிடிக்கும் குழுக்கள் முன்னால் சென்றனர்.
» இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தல்: முதல்வரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி
» 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: காங்கிரஸ் 4, திரிணமூல் 4, பாஜக 2 இடங்களில் வெற்றி
புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையைத் திறப்பதற்கு முன்பாக அரசுக் குழு மூன்று நிலையான செயல்முறைகளைச் செய்தது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூன்று நிலையான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒன்று ரத்ன பண்டாரவை மீண்டும் திறப்பது தொடர்பானது. இரண்டாவது ரத்ன பண்டாரவை தற்காலிகமாக நிர்வகிப்பது தொடர்பானது. மூன்றாவது மதிப்பு மிக்க பொருள்கள் தொடர்பானது.
நகைகளை மதிப்பிடும் பணி இன்று தொடங்காது. பொற்கொல்லர்கள், நகைமதிப்பீட்டாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் குறித்து அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்தார். ஒடிசா அரசு ரத்ன பண்டாரவில் உள்ள மதிப்புமிக்க பொருள்கள் குறித்து ஒரு டிஜிட்டல் அட்டவணையை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.