பட்டியலினச் சமூகத்தினரைக் கவர முயற்சிக்கும் கட்சிகள்: வியூகம் வெற்றி தருமா?

By ஆர். ஷபிமுன்னா

2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிவரும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளுக்குக் குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றன. இப்பட்டியலில் காங்கிரஸ். பாஜக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ்

அக்டோபர் 17-ல் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். இதில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான கார்கேவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது.

இதன் மூலம், மக்களவைத் தேர்தலில் பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளை நம்பியிருப்பது தெளிவாகிறது. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக, பட்டியலினத் தலைவரான பிரிஜ்லால் காப்ரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது, காங்கிரஸ் ஒரு உயர் சமூகத்தினருக்கான கட்சி எனும் கருத்தை மாற்றும் நகர்வு என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ராகுல் காந்தியுடன் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜ்லால் காப்ரி

ஒருகாலத்தில், காங்கிரஸின் அடித்தளமாக உத்தர பிரதேசம் இருந்தது. 1989-ல் பறிகொடுத்த அந்த மாநிலத்தை காங்கிரஸ் கட்சியால் இதுவரை மீட்க முடியவில்லை. அடுத்தடுத்த தோல்விகளும் அக்கட்சியை நிலைகுலைய வைத்தன. அமேதி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் தோற்றது காங்கிரஸை அதிரவைத்தது. அமேதியில் தோல்வி உறுதி எனத் தெரிந்தோ என்னவோ கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வென்று தனது எம்பி பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்கு சராசரியாக இருந்த எட்டு சதவீத வாக்குகள், இவ்வருடத் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 2.33 சதவீதமாகக் குறைந்தன.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள்...

பட்டியலினச் சமூகத்தினரின் பரவலான ஆதரவைப் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குவங்கியும் சரிந்துவருகிறது. அக்கட்சியின் தலைவரான மாயாவதி எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவான வாக்குகள் கடந்த உபி சட்டப்பேரவை தேர்தலில் பிரிந்தன. பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் பட்டியலினச் சமூகத்தினர் பரவலான வாக்குகள் சென்றன.

இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து தீவிரப் பிரச்சாரம் செய்ய திட்டமிடுகிறது. இதற்காக கடந்த வாரம் லக்னோவில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சிக் கூட்டத்தில் ஒரு புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இச்சூழலைப் புரிந்துகொண்ட மாயாவதி, வேறுவழியின்றி மீண்டும் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

பாஜகவின் பாசம்

பட்டியலின வாக்குகளைக் கவர பாஜகவும் பலமான முஸ்தீபுகளில் ஈடுபட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 16-ல் கொண்டாடப்பட்டது. இந்நாளில் நாடு முழுவதிலும் பட்டியலினச் சமூகத்தினர் வாழும் 75,000 பகுதிகளில் பாஜகவினர் முகாமிடத் தொடங்கினர். இந்திய அரசமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 வரை, நடைபெறும் இந்த முகாமிற்கு ‘சம்பர்க் அபியான்(தொடர்பு இயக்கம்)’ என பாஜகவினர் பெயரிட்டுள்ளனர். இதில் பாஜகவின் எஸ்சி பிரிவினர் நேரடியாக அப்பகுதிகளுக்குச் சென்று பட்டியலின மக்களிடம் பேசிக் குறைகளைக் கேட்பார்கள். இந்தச் சந்திப்புகள் மொத்தம் 70 நாட்களுக்காக தொடர்ந்து நடைபெற உள்ளன.

இந்தச் சந்திப்புகளின்போது பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஐந்து பேர் கொண்ட குழுக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பட்டியலின மக்கள் மத்தியில் பாஜக மீதுள்ள தவறான கருத்துகள் விலகும் எனவும் கட்சியின் தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பட்டியலினச் சமூகத்தின் ஒரு பிரிவான ஜாதவ் சமூக வாக்குகள் பாஜகவிற்கு 13 சதவீதம் அதிகரித்திருந்தது. மேற்குவங்க மாநிலத்திலும் பட்டியலினத்தவரின் 18 சதவீத வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்திருந்தன. இவை, பட்டியலின சமூகத்தினருக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களின் பலன் என அக்கட்சி கருதியது. மத்திய அமைச்சரவையிலும், தற்போது பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். மாநிலங்களவையில், பாஜகவின் சார்பில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் எம்.பி-க்களாக இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்திருக்கிறது.

உத்தி ‘கை’ கொடுக்குமா?

பட்டியலினச் சமூகத்தினரை முன்னிறுத்தும் அரசியல் காங்கிரஸ் கட்சிக்குப் புதிதல்ல. கடந்த பிப்ரவரியில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த உத்தியை அக்கட்சி முயற்சித்தது. இங்கு காங்கிரஸின் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை அகற்றி, பட்டியலினச் சமூகத்தவரான சரண்ஜித் சிங் சன்னியை அமர்த்தியது. அடுத்த ஐந்தாவது மாதத்தில் வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங்கே முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஜாட் சமூகத்தின் பக்வந்த் மானிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.

எனினும், காங்கிரஸ் இதைத் தனது பட்டியலின அரசியல் வியூகத்தின் தோல்வி எனக் கருதவில்லை. மாறாக பஞ்சாபில் உறுதியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட வேறுசில காரணங்கள் என நம்புகிறது. எனவே, மீண்டும் பட்டியலினச் சமூகத்தினரை முன்னிறுத்தும் அரசியலை மக்களவைத் தேர்தலில் கையில் எடுக்கிறது. இந்த வியூகம் காங்கிரஸ் கட்சிக்குக் ‘கை’கொடுக்குமா எனத் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE