திருப்பதி: ரூ.6 லட்சத்தில் ஏழுமலையானுக்கு குங்குமப்பூ மாலை!

By என். மகேஷ்குமார்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று மாலை நடந்த சிறப்பு திருமஞ்சன சேவையில் உற்சவ மூர்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பருக்கு ரூ. 6 லட்சம் செலவில் குங்குமப்பூ மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

குங்குமப்பூ மாலை அலங்காரத்தில்...

திருப்பதி பிரம்மோற்சவ நாட்களில் 2 முறை கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும், சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான செப்டம்பர் 28-ம் தேதி மாலை நடைபெற்றது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று மாலை மீண்டும் 2-வது முறையாக சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் ரங்கநாயக மண்டபம் முழுவதும் ஜப்பான், கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் விளையும் பழங்கள் மற்றும், உலர் பழ வகைகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதல்முறையாக இந்த ஆண்டு உற்சவர்களுக்கு குங்குமப்பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.2 லட்சமாகும். உற்சவர்களுக்கு சாத்தப்பட்ட மாலைகள் மொத்தம் 3 கிலோ எடையிலான குங்குமப்பூக்களால் தொடுக்கப்பட்டதாகும். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்

இந்த மாலைகளை திருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன், சண்முகசுந்தரம், பாலசுப்ரமணியம் ஆகியோர் ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தனர். உற்சவர்களுக்கு குங்குமப்பூ மாலையை தவிர, பிஸ்தா, பாதாம், ஏலக்காய், லிச்சி, சோளம் போன்றவற்றால் மாலைகளும் கிரீடங்களும் தயார் செய்யப்பட்டு அபிஷேகத்திற்கு பிறகு அபிஷேக பிரியருக்கு அணிவிக்கப்பட்டது.

இத்தகைய மாலைகள், மற்றும் கிரீடங்களை ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்பிகா பூ வியாபார நிறுவனத்தார் 60 கலைஞரகளை கொண்டு இரவு பகலாக தயாரித்துள்ளனர். இந்த சிறப்புத் திருமஞ்சன நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE