புதுடெல்லி: நாடு முழுவதும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 4, திரிணமூல் காங்கிரஸ் 4, பாஜக 2, திமுக, ஆம் ஆத்மி, சுயேச்சை தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
மேற்குவங்கத்தில் 4, இமாச்சல பிரதேசத்தில் 3, உத்தராகண்டில் 2, மத்திய பிரதேசம், பிஹார், பஞ்சாப்,தமிழ்நாட்டில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன்படி ராய்கன்ஜ்தொகுதியில் கிருஷ்ண கல்யாணி, ராணாகாட் தக்சின் தொகுதியில் முகுத்வாணி அதிகாரி, பக்தா தொகுதியில் மதுபர்னா தாக்குர், மாணிக்தலா தொகுதியில் சுப்தி பாண்டே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இமாச்சலின் 3 தொகுதிகள்: இமாச்சல பிரதேசத்தின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தேஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்குர் வெற்றி பெற்றார். இவர் அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி ஆவார். இமாச்சல பிரதேசத்தின் நலகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா, ஹமீர்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆசிஷ் சர்மா வெற்றி பெற்றனர்.
» இண்டியா கூட்டணி அசத்தல் முதல் இடைத்தேர்தல் முடிவு ரியாக்ஷன்கள் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
» ஜெய்ஸ்வால், கில் அதிரடி ஆட்டம் - ஜிம்பாப்வேயை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா!
உத்தராகண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் 2 தொகுதிகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதன்படி மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குவாசி முகமது நஸ்முதீன், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகாபத் சிங் வெற்றி பெற்றனர்.
பிஹாரில் சுயேச்சை வெற்றி: பிஹாரின் ரூபாலி தொகுதி எம்எல்ஏவாக இருந்த பீமா பார்தி அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
ரூபாலி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றார். ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த காலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பீமா பார்தி தோல்வியை தழுவினர்.
பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் மொகீந்தர் பகத் வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் ஆளும் பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 4, திரிணமூல் காங்கிரஸ் 4, பாஜக 2, திமுக, ஆம் ஆத்மி, சுயேச்சை தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வென்றுள்ளன.