13-ல் இண்டியா கூட்டணி 10, பாஜக 2 இடங்களில் வெற்றி: நாடு முழுவதும் 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
இதில் மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளும் கட்சியான மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. உத்தராகண்டில் மூன்று தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸும், ஒன்றில் பாஜகவும் வென்றுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும், தமிழகத்தின் விக்கிரவாண்டியில் திமுகவும், மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன. பிஹாரின் ருபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றியை தட்டிச் சென்றுள்ளார்.
» 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி அபாரம் - அதிர்ச்சியில் பாஜக!
» இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தல்: முதல்வரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி
காங்கிரஸ் ரியாக்ஷன் என்ன?: பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டது என்பதையே 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இண்டியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வெற்றிகள், வடக்கே பஞ்சாப் முதல் தெற்கே தமிழ்நாடு வரையிலும், கிழக்கே மேற்கு வங்கம் வரையிலும் உள்ள மாநிலங்களில் கிடைத்த வெற்றிகள். இடைத்தேர்தல் முடிவுகளை மிகைப்படுத்தப்படக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரத்தில், பாஜகவால் ஒதுக்கித் தள்ள முடியாத படிப்பினைகளும் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு, வெறுப்பை பரப்புவது போன்ற காரணங்களால் பாஜக மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது” என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
“சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி” - முதல்வர்: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றுள்ளன. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.
விக்கிரவாண்டி முடிவுகள்: ராமதாஸ் கருத்து: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்துக்கும், பாமகவின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாமகவுக்கு தான் கிடைத்திருக்கிறது.” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதனிடையே “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று இல்லவே இல்லை. தமிழக மக்கள் ஒருமுறை பணம் கொடுத்தாலே தாங்க மாட்டார்கள். 3 முறை சராசரியாக ஒவ்வொரு வாக்காளர்களும் தலா ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றதற்கு பாமகதான் காரணம். இதற்காக வாக்காளர்கள் பாமகவுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
அண்ணாமலை சொல்வது என்ன?: “தமிழகத்தைப் பொறுத்தவரையில், இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான். அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. அதேநேரம், இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் அவர், "அரசின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் தாண்டி இத்தனை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுவும் ஒரு சாதனைதான். எனவே, நிச்சயமாக வருகின்ற காலம் மாறும். இடைத்தேர்தல் முடிவுகளை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், இதற்குமுன்பு தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த ஆட்சி 2026 தேர்தலில் ஆட்சியை இழக்கும்” என்று அவர் கூறினார்.
நாதக வேட்பாளர் ரியாக்ஷன்: “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2,000 வாக்குகள் பெற்றுள்ளோம்.இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்,” என்று விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கூறியுள்ளார்.
பொய் வழக்கு போட்டால் போராட்டம் ’ - இபிஎஸ்: “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சிவில் வழக்கில் தொடர்பில்லாத அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இது, மேலும் தொடர்ந்தால் அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும். இதே நிலை எதிர்காலத்தில் திமுக அரசின் அமைச்சர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளைத் திருத்தி உள்ளது. காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. பிரிவு 55 என்பது, ஆளுநரின் அதிகாரம் பற்றியது. இந்த பிரிவில்தான் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"ஜம்மு காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தி இருக்கிறது. இதன்மூலம், நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக விளங்கிய ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு நகராட்சியாக மாற்ற விரும்புகிறது" என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் வெள்ளத்தால் 90 பேர் உயிரிழப்பு: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கருக்கு ஜூலை 23 வரை நீதிமன்றக் காவல்: போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.