சமாஜ்வாதி கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறாரா மாயாவதி?

By ஆர். ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் (எஸ்பி), மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மீண்டும் கூட்டணி அமைக்கலாம் எனும் சூழல் தென்பட ஆரம்பித்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இரண்டு கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் ஒருமித்த கருத்த கருத்தை வெளிப்படுத்துவதே இதற்கு சாட்சி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தர பிரதேச அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருப்பவை. இக்கட்சிகள் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இவர்களுடன் ராஷ்ட்ரிய லோக் தளமும் (ஆர்எல்டி) இணைய, காங்கிரஸ் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 37, பகுஜன் சமாஜ் கட்சி 38 மற்றும் ஆர்எல்டி மூன்றில் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன. சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. சில அரசியல் காரணங்களால், சமாஜ்வாதியுடனான கூட்டணி இனி தொடராது என அறிவித்தார் மாயாவதி.

கடந்த மார்ச்சில் முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. எஸ்பிக்கு 37 இடங்களும், பிஎஸ்பிக்கு ஒரு தொகுதியுடன் 12 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. 49 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற மீண்டும் பிஎஸ்பி, எஸ்பி கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ற வகையில், கடந்த வாரம் உபி சட்டப்பேரவையின் கடைசி நாளன்று லக்னோவில் அகிலேஷ் போராட்டம் நடத்தினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்ட போது பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்ததுடன் அகிலேஷின் போராட்டம் நியாயமானது என மாயாவதி குறிப்பிட்டிருந்தார்.

நேற்று முன்தினம் நடந்த சமாஜ்வாதி கட்சிக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக அக்கட்சியினர் எந்த விமர்சனமும் செய்யவில்லை. இரண்டு கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் நெருங்கி வருவதை இந்த நகர்வுகள் காட்டுவதாகவே பேசப்படுகிறது.

மேலும் எஸ்பி, பிஎஸ்பி தவிர எதிரணியில் இதர கட்சிகளுக்கு உத்தர பிரதேசத்தில் பெரிய அளவில் வாக்குவங்கி இருப்பதாகத் தெரியவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலேயே தோல்வியடைந்தது அம்மாநிலத்தில் காங்கிரஸின் நிலைமை என்னவென்று காட்டியது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 403 தொகுதிகளில் பாஜக 265 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி கட்சிக்கு 125 இடங்கள் கிடைத்தன. இதர எதிர்கட்சிகளில் மாயாவதியின் பிஎஸ்பி ஒரு இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும் வென்றன. இந்தச் சூழலில், பிஎஸ்பி தலைவரான மாயாவதி, 2024 மக்களவைத் தேர்தலில் தன் கட்சியை மீண்டும் வலுப்படுத்த விரும்புகிறார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்குக் கணிசமான தொகுதிகள் கிடைத்தால், அக்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க தனது உதவி அவசியப்படும் எனவும் அவர் கருதுகிறார். அதேசமயம், இந்த உதவி பாஜகவுக்குத் தேவைப்பட்டாலும் நேசக்கரம் நீட்ட மாயாவதி தயங்க மாட்டார் என்ற கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE