இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தல்: முதல்வரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி

By KU BUREAU

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரும், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவியுமான கமலேஷ் தாக்கூர் டேஹ்ரா சட்டப் பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவியுமான கமலேஷ் தாக்கூர், டேஹ்ரா தொகுதியில் போட்டியிட்டு 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹோஷ்யர் சிங்கை தோற்கடித்தார்.

இதேபோல், அம்மாநிலத்தில் நலகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹர்தீப் சிங் பாவாவும் வெற்றி பெற்றார். ஹமிர்பூரில் பாஜக வெற்றி வாகை சூடியது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மணிக்தலா தொகுதியிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. உத்தராகண்டில் மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காசி முகமது நிஜாமுதீன் முன்னிலையில் உள்ளார். பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் லகாபத் சிங் புடோலா வெற்றி பெற்றார்.

பீகார் மாநிலம், ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா வெற்றி பெற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE