பத்து ரூபாய் செலுத்தினார்; 1.19 லட்சத்தை இழந்தார்: ஓய்வுபெற்ற அதிகாரியை பதறவைத்த மோசடி கும்பல்

By காமதேனு

மின்வாரியத்தில் இருந்து மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியைத் தொடர்புகொண்டு நூதன முறையில் 1.19 லட்சத்தை ஏமாற்றிய மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

மதுரை கே.புதூர் மகாலெட்சுமி நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் கோட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள் நடப்பு மின் கட்டணத்தை செலுத்தவில்லை என மெசேஜ் வந்தது. அவர் அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே மின் கட்டணம் செலுத்தியிருந்ததால் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பிவைத்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் உங்கள் மின்கட்டணத்தில் பத்து ரூபாய் மட்டும் பாக்கி உள்ளது. உங்களுக்கு ஒரு லிங் அனுப்புகிறோம். குறிப்பிட்ட ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த லிங்கை க்ளிக் செய்து பத்து ரூபாய் மட்டும் பணம் செலுத்த அந்த தொலைபேசி அழைப்பு அறிவுறுத்தியது.

அதன்படி, அந்த ஓய்வுபெற்ற அதிகாரி தன் ஏ.டி.எம் விவரங்களைக் கொடுத்து செயலி வழியே பத்து ரூபாய் கட்டியுள்ளார். அடுத்த சில நிமிடத்தில் அவர் வங்கிக்கணக்கில் இருந்து மூன்று தவணைகளாக 1.19 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காவல்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE