வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பல்: கஞ்சா போதையில் கத்தியுடன் கானா பாடல் வீடியோவால் சிக்கியது

By ரஜினி

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்கள் கஞ்சா போதையில் வீடியோ வெளியிட்டு சிக்கிக் கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்ரம் (19). இவர் கடந்த 20-ம் தேதி தனது நண்பருடன் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவரை நான்கு பேர் கொண்ட கஞ்சா கும்பல் வழிமறித்து கத்தியால் கீறி ஒரு சவரன் நகை, புல்லட் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றது..

இதில் காயமடைந்த விக்ரம், அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.. இச்சம்பவம் குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் விக்ரம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் நான்கு இளைஞர்கள், கஞ்சா போதையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ஆட்டம் போடும் வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த வீடியோ வெளியிட்ட நபர்களை அடையாளம் கண்டு பிடித்து இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் பெரம்பூர் சேர்ந்த இளமாறன்(19), ஆனந்தகுமார் என்ற மூலை(23) என்பது தெரியவந்தது. மேலும் கைதான இளம்மாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விக்ரம் என்ற வாலிபரை தாக்கி செயின், புல்லட் ஆகியவற்றைப் பறித்து சென்றது தெரியவந்தது. லோக்கல் ரவுடியான இளமாறன் மீது கொலைமிரட்டல், வழிப்பறி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.. இதனையடுத்து போலீஸார் இருவரை கைது செய்து புல்லட், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE