பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எமர்ஜென்சியை ஆதரித்தது: சஞ்சய் ராவத் அதிரடி

By KU BUREAU

மும்பை: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் பால் தாக்கரே அவசரநிலையை ஆதரித்தனர் என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிவசேனா உத்தவ் தாக்கரே (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) அணியின் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், " பாஜகவுக்கு வேலை இல்லை என்று தெரிகிறது. அவசரநிலை நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகளாகி விட்டது. அதை மக்கள் மறந்துவிட்டார்கள், ஆனால் அதன் போர்வையில் சிலர் இன்று நாட்டில் அராஜகத்தை பரப்பி வருகின்றனர். எமர்ஜென்சிக்கு பிறகு ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. அது அரசியல் சாசனம் கொலை செய்யப்பட்டதாக நினைக்கவில்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு ஆட்சிக்கு வந்த போது கூட அவர் அரசியல் சாசனம் கொலை செய்யப்பட்டதாக நினைக்கவில்லை. சந்திரசேகர் பிரதமரானார், அரசியல் சாசனம் கொல்லப்பட்டதாக அவர் நினைக்கவில்லை. ஆனால் இன்றைய அரசு திடீரென அரசியல் சாசனம் கொலை செய்யப்பட்டதாக உணர்ந்துள்ளது. இன்று நாட்டில் சட்டம், மத்திய அரசின் ஊழல், அராஜகம் அதிகரித்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் கொலையல்லவா? எமர்ஜென்சி பற்றி பாஜகவினருக்கு என்ன தெரியும்" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில்," பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எமர்ஜென்சியை ஆதரித்தது அவர்களுக்குத் தெரியுமா? அப்போது இந்த தலைவர்களின் வயது என்ன? மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் அரசியல் சாசன படுகொலை தினமாகவே உள்ளது. எமர்ஜென்சியை ஆதரித்தவர்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பால் தாக்கரே ஆகியோரும் அடங்குவர். பால் தாக்கரேவின் போட்டோவை வைத்து பாஜக ஓட்டு கேட்கவில்லையா? அப்போது பால் தாக்கரே இந்திரா காந்தியைத் தானே ஆதரித்தார்?.

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பால் தாக்கரே ஆகியோர் அவசரநிலையை ஆதரிப்பதில் வலுவான பங்கைக் கொண்டிருந்தனர், ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பினர். ஆனால், பாஜக போலி சிவசேனாவை வைத்து பால் தாக்கரே புகழ் பாடுகிறது.

அவசரநிலை என்பது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயம். சிலர் நாட்டில் வெடிகுண்டுகளைத் தயாரித்து வெடிக்கச் செய்கிறார்கள், அவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இன்று ஏன் எமர்ஜென்சி விதிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அப்போது எமர்ஜென்சியை பகிரங்கமாக ஆதரித்த பால்தாக்கரேவை இன்று பாஜகவினர் போலி சிவசேனாவுடன் சேர்ந்து புகழ்ந்து பாடுகின்றனர். ஆனால் மும்பையில் அவசரநிலையை பால் தாக்கரே வரவேற்றார்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE