திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தற்கொலை: தோற்றத்தை கிண்டல் செய்ததால் விபரீதம்

By KU BUREAU

தானே: தனது தோற்றத்தைப் பற்றி உருவக்கேலி செய்ததுடன், 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதால் போலீஸ்காரர் மனைவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் டோம்பிவலியைச் சேர்ந்தவர் கஜனன் வர்தே. இவரது மகள் ஜாக்ரிதி. இவருக்கும் சாகர் ராம்லால் என்பவருக்கும் 2024 ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. மும்பையில் சாகர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது 14 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும், 6 கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தையும் வரதட்சணையாக தனது மகளின் மாமியார் ஷோபாவிடம் கஜனன் வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் திருமணமான சில நாட்களுக்குப் பிறகு மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்றும், அதற்கு வரதட்சணையாக 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று ஜாக்ரிதியின் தந்தை கஜனனிடம், சாகரின் தாய் ஷோபா கேட்டுள்ளார். ஆனால், அந்த பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஜாக்ரிதியின் சகோதரர் விஷாலுக்கு சாகர் ராம்லால் போன் செய்துள்ளார். அதில், உங்கள் சகோதரி ஜாக்ரிதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கஜனன் குடும்பத்தினர் சாகர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரது மகள் பிணமாக கிடந்தார்.

இது குறித்து சாகர் ராம்லால், அவரது தாய் ஷோபா ஆகியோர் மீது ஜாக்ரிதியின் குடும்பத்தினர் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்த போது, ஜாக்ரிதி சாவதற்கு முன்பு அவரது தாயிடம் பேசியது தெரிய வந்தது. அப்போது, தனது மாமியார் தனது தோற்றத்தைப் பற்றி உருவக்கேலி செய்வதாகவும், 'நீ கருப்பு, உன் உதடுகள் கருப்பு மற்றும் உன் வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்பதால் என் மகனுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. உன் பெற்றோர் வீட்டில் இருந்து 10 லட்சம் கொண்டு வந்தால் இங்கே இரு, இல்லாவிட்டால் உன் பெற்றோர் வீட்டுக்குப் போ' எனறு திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் ஜாக்ரிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில், என் சாவுக்கு என் மாமியார், கணவர் தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் மண்பாடா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE