அம்பானி வீட்டு திருமணத்திற்கு வரிச்சலுகை தரக்கூடாது: போர்க்கொடி உயர்த்தும் மக்கள் நீதி மய்யம்!

By KU BUREAU

திருச்சி: முகேஷ் அம்பானி வீட்டு ஆடம்பர திருமணத்திற்கு வரிச்சலுகை வழங்கினால் ஏழை இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பாதிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அம்பானி குடும்பங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரது திருமணம் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் மும்பையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக மும்பையின் இயல்பான நிலை முற்றிலுமாக மாறி இருக்கிறது. கடுமையான வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் முகேஷ் அம்பானி வீட்டு ஆடம்பர திருமணத்திற்கு வருமான வரிச் சலுகை தரக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திருமணம் வீடு ஆகியவை மனிதனின் கனவு. இதற்காக தனது சக்திக்கு மீறி செலவு செய்வது மனித இயல்பு. மகனுக்காக முகேஷ் அம்பானி பல கோடி ரூபாய் செலவு செய்வது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.’

’ஆனால் இந்த ஆடம்பர திருமணத்திற்கான செலவை வருமான வரியில் முகேஷ் அம்பானி செலவு கணக்கு காட்டினால், அதனை வருமானவரித்துறை ஏற்றுக் கொள்ளக் கூடாது. முகேஷ் அம்பானி ஆடம்பர திருமணத்திற்காக செய்யும் செலவு அவருடைய வருமானத்தை மட்டும் சார்ந்தது அல்ல. ஜியோ குழுமம் மற்றும் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரையும் சார்ந்தது. பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டம் காட்டும் முகேஷ் அம்பானி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்கவில்லை.’

’இதிலிருந்து அவர் ஒரு வியாபாரி என்பது தெரிய வருகிறது. எனவே கடைக்கோடி ஏழை இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறிக்கும் விதமாக முகேஷ் அம்பானி வீட்டில் ஆடம்பர திருமணத்திற்கான செலவை தனது வருமானத்தில் காட்டினால், அதனை வருமானவரித்துறை ஏற்கக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE