புதுடெல்லி: பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கும், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூர் ஆகிய தொகுதிகளுக்கும், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, பீகாரில் ரூபாலி, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா ஆகிய தொகுதிகளில் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இவற்றில் 4 மாநிலங்கள் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
» உலக சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு!
» உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேருக்கு மறுவாழ்வு!
இமாச்சலப் பிரதேசத்தின் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
பீகாரில் ஐக்கிய ஜனதாளம் வேட்பாளரும், மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளரும், பஞ்சாபில் ஆம் ஆத்மி வேட்பாளரும், தமிழ்நாட்டில் திமுக வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.