திருட்டு பைக்கை 2 வருடமாக பயன்படுத்திய போலீஸ்காரர்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் அதிர்ச்சி பின்னணி

By ரஜினி

திருடனிடம் இருந்து பறிமுதல் செய்த டூவீலரை இரண்டு வருடமாக உரியவரிடம் ஒப்படைக்காமல் ஓட்டி வந்த காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ரவுடிகள், மற்றும் விபசார புரோக்கர்களுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக காவலர்கள் ஏகாம்பரம், திருமால், கருப்பையா, வேல்முருகன் ஆகிய 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. இதில் குறிப்பாக தலைமை காவலர் கருப்பையா திருடனிடம் பறிமுதல் செய்த புல்லட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சென்னை வடபழனி, கே.கே நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவலர் கருப்பையா மீது பல்வேறு புகார்கள் வந்தன. நியாயம் கேட்டு காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எதிர்மனுதாரருடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு எண்ணூர் காவல் நிலையத்திற்கு கருப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..

எண்ணூர் காவல் நிலையத்தில் ஆறு மாதம் பணியாற்றி வந்த கருப்பையா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் கே.கே நகர் காவல் நிலையத்தில் பணியிடம் பெற்று வந்துள்ளார். அப்போது சோழவரம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று கே.கே நகர் பகுதியில் காவலர் கருப்பையாவிடம் சிக்கியது. அப்போது திருடனிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்த கருப்பையா மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இரண்டு வருடங்களாக சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மேலும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு நெருங்கிய நண்பர் எனக்கூறி கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான கமல்தாஸ் என்பவருக்கு கையாளாக காவலர் கருப்பையா செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததன் காரணமாக காவலர் கருப்பையா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையில் பல கண்ணியமிக்க காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவலர் கருப்பையா உள்ளிட்ட சில காவலர்கள் ஈடுபட்டு வருவது காவல்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE