திருப்பதி: சாமி தரிசனம் செய்த பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணின் தலை மீது மரக்கிளை முறிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைப்பாதை வழியாக இவர்கள் கோயிலுக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் திருமலையின் மீதுள்ள ஜப்பலி ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே சில பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பழமையான மரம் ஒன்றின் கிளை திடீரென முறிந்து விழுந்தது.
அதேசமயம் கீழே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது அந்த கிளை அதிவேகத்தில் விழுந்தது. இதில் அந்த பெண் படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவஸ்தான கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே இந்த சம்பவத்தை பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.