கண் பேசாவிட்டாலும் காற்றலை பேசும்!

By என்.சுவாமிநாதன்

சாதிக்க துடிப்பவர்களுக்கு உடல் குறைபாடெல்லாம் ஒரு தடையே இல்லை. இதற்கு நிகழ்கால சான்றாகியிருக்கிறார் பேராசிரியர் முகமது அஸ்கர்.

பார்வை மாற்றுத்திறனாளியான முகமது அஸ்கர், நாகூர் ஹனிபாவின் புகழ்பாட ‘இசை முரசு’ என்னும் பெயரில் இணைய வானொலி ஒன்றைத் தொடங்கி பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளை வழங்குகிறார். இந்த வானொலிக்கு கடல்கடந்தும் நேயர் பட்டாளம் இருக்கிறது.

விருதுகளுடன் முகமது அஸ்கர்

நாகர்கோவில் ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியர் முகமது அஸ்கர். திருவிதாங்கோட்டில் உள்ள முஸ்லிம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருக்கிறார். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், சிறுவயதில் இருந்தே கலை, இலக்கியப் பின்னணியில் வளர்ந்தவர். அதனால் தடைக்கற்களை எல்லாம் தகர்த்தெறிந்து, இசைமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறார் அஸ்கர்.

விஷயம் கேள்விப்பட்டு அஸ்கரை தொடர்புகொண்ட போது தனது ஊரைப் பெற்றிய பெருமையான முன்னுரையுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார். “ஆளூர் அடிப்படையில் கலை, இலக்கியப் பாரம்பரியம் நிறைந்த ஊர். முஸ்லிம் முரசு இதழின் ஆசிரியராக இருந்த மறைந்த ஆளூர் ஜலால் போன்ற ஆளுமைகளின் ஊர் இது. ஹஜ் பெருநாள் காலங்களில் எங்கள் ஊரில் தொடர்ச்சியாக இலக்கிய விழாக்கள் நடக்கும். தமிழகத்தின் முக்கிய பேச்சாளுமைகள் அனைவரது கால்தடமும் எங்கள் ஊரில் பதிந்திருக்கிறது.

எங்கள் ஊருக்கு ஒருமுறை வந்த பேச்சாளர்கள், மீண்டும் எப்போதாவது வரும்போது அவர்கள், முன்பு பேசிய உரையை சொல்லிக் காட்டுவேன். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். நான் படித்த ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளியில் புலவர் ஜான் ரோஸ் என்று ஒரு தமிழாசிரியர் இருந்தார். அவர் என்னை எங்கெல்லாம் பேச வைக்க முடியுமோ அங்கெல்லாம் அழைத்துச் சென்று பேசவைத்தார். அதேபோல் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வராக இருந்த ஜேம்ஸ் ஆர்.டேனியலும் மாவட்டத்தின் பெரிய இலக்கிய மேடைகளில் பேசும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இலக்கிய உலகில் தொடர்ந்து உலாவச் செய்தது” என்கிறார் அஸ்கர்

அஸ்கரின் குடும்பம் அடிப்படையில் ஓர் விவசாயக் குடும்பம். மகனை பள்ளி - கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அழைத்து வருவது மட்டுமல்லாது இலக்கியம் உள்ளிட்ட மேடைகளுக்கும் அலுப்புத்தட்டாமல் அழைத்துச் சென்று பேசவைத்ததில் அஸ்கரின் தந்தை முகமது இஸ்மாயிலுக்கு பெரும்பங்கு உண்டு. வீட்டின் கடைக்குட்டி பிள்ளையான அஸ்கரின் இலக்கிய ஆர்வத்துக்கு திருமணத்துக்கு முன்பு, உடன் பிறந்தவர்களும் திருமணத்துக்குப் பிறகு மனைவி நஸிபாவும் உறுதுணையாக நிற்பதால் சாதனைப் படிக்கட்டுகளில் சரசரவென நடக்கிறார் அஸ்கர்.

மனைவி மற்றும் மகனுடன்...

“மூளையில் இருந்து கண்ணிற்குச் செல்லும் பார்வை நரம்பில் எனக்கு பிறவியிலேயே குறைபாடு இருந்தது. ஆனால், மூன்று வயதான போதுதான் எனது பெற்றோருக்கு இது தெரியவந்தது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு ஐந்தாம் வகுப்பு வரை சராசரி பள்ளிக்கூடத்திலேயே படித்தேன். அதன் பிறகு தான் ப்ரெய்லி பள்ளியில் சேர்த்து படிக்க ஆரம்பித்தேன். ப்ரெய்லியில் நன்றாக எழுதப் பழகியதும் மீண்டும் சராசரி பள்ளிக்கே வந்துவிட்டேன்.

எங்கள் ஊரில் ரம்ஜான் சமயத்தில் மேடையில் வார்த்தை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவேன். அதைப் பார்த்துவிட்டு, உள்ளூர் சேனல் உரிமையாளர் ஜகுபர் சாதிக், தனது சேனலில் இதேமாதிரி நடத்த முடியுமா என அழைத்தார். அப்படித்தான் ப்ளஸ் டூ மாணவனான எனக்கு உள்ளூர் சேனலில் வார்த்தை விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிகைக் காலத்தில் தொடங்கிய அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் எனக்கு அந்தச் சேனலில் முக்கிய இடம் கிடைத்தது. லோக்கல் சேனல்களில் அப்போது செய்திகளும் வாசிப்பார்கள். அப்போது நான் செய்தி ஆசிரியராகவும் இருந்தேன். அது இன்னும் சில லோக்கல் சேனல்களிலும் நான் முக்கிய பொறுப்புக்கு வர உதவியது. அதற்காக விருதுகளும் என்னைத் தேடி வந்தது தனிக்கதை.

இத்தனை சுறுசுறுப்பாக இருந்தாலும் மாற்றுத்திறனாளியாக இருக்கிறோமே என்ற கவலை எனக்கு துளியும் இருந்ததில்லை. முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியராக ஆனபின்பு, எனக்குள் இருந்த இலக்கியத் திறமையை வெளிப்படுத்த ஒரு களமாகவே இந்த இணைய வானொலியைக் கையில் எடுத்தேன்.

இந்த நேரத்தில் எனது மனைவியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். எனது கனவு, லட்சியம் என அத்தனையும் சுமப்பது என் மனைவிதான். இசைமுரசு இணைய வானொலியில் ப்ரமோஷன் பணிகளை முன்னெடுப்பதும் அவர்தான். நாகூர் ஹனீபாவின் பாடல்களை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ‘இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்னும் அந்த கம்பீரமான காந்தக்குரல் ஒலிக்காத இஸ்லாமியர் இல்லங்களே இருக்கமுடியாது. அவரது பாடல்களைத் தொகுத்து, அவரது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைச் சேர்த்துத்தான் இந்த 24 மணிநேர இணைய வானொலியைத் தொடங்கினேன்.

இந்த வானொலியில் தினமும் ஒரு மணிநேரம் முக்கிய ஆளுமைகளுடன் நான் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சியும் ஒலிபரப்புவோம். காலையில் எட்டரை மணிக்கு கல்லூரிப் பேருந்து என் வீட்டருகில் வரும். அதற்கு முன்பாக ஐந்தரை மணிக்கே எழுந்து ஏழு மணிக்குள் அன்றைக்கான எனது வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வைத்துவிட்டுத்தான் கல்லூரிக்குப் புறப்படுவேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் எங்களது வானொலிக்கு நேயர்கள் இருக்கிறார்கள். வானொலி தொடங்கிய ஒரு வருடத்திலேயே நாங்கள் அடைந்திருக்கும் இலக்கு இது. இன்னும் நேயர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எனது கடந்த கால அனுபவங்களைக் கொண்டு புதிது புதிதாக நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிக் கொண்டு வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது” என்கிறார் அஸ்கர்.

விடைபெறும் தருணத்தில் நம்மிடம் பேசிய அஸ்கரின் மனைவி நஸிபா அஸ்கர், “ஒரு நிமிஷம்கூட ஓய்வு எடுக்கமாட்டார். சதா சர்வ நேரமும் ஏதாவது ஒருவகையில் உழைத்துக்கொண்டே இருப்பார். அவரின் அசராத உழைப்புக்குத்தான் இசை முரசு, பலரின் இதயத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது” எனச் சொல்ல, ”இவங்க தான் எல்லாமே” என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் இழுத்துக் கொள்கிறார் அஸ்கர்.

“இப்படியே ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருந்து இன்னும் பல சாதனைகளை படைத்திடுங்கள். அப்போதும் பேட்டி எடுக்க வருகிறோம்” என்று இருவரையும் வாழ்த்தி விடைபெற்றோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE