பெற்றோர், மாமனார், மாமியாருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை: அசாம் அரசு புதிய முயற்சி!

By KU BUREAU

கவுகாத்தி: அசாம் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவித்துள்ளது.

அசாம் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக வரும் நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விடுமுறையை வேறு காரணங்களுக்கு பயன்படுத்த முடியாது. மேலும் பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புக்கு தகுதியற்றவர்கள் எனவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக சிறப்பு சாதாரண விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையை வயதான பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் மட்டுமே. தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை நவம்பர் 7ம் தேதி சத் பூஜை விடுமுறை, நவம்பர் 9ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் எனவும் அசாம் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவை பணிகளில் உள்ளவர்கள் வெவ்வேறு கட்டத்தில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த 2021ல் பதவியேற்ற பிறகு, தனது முதல் சுதந்திர தின உரையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE