கர்நாடகாவில் பரபரப்பு: 56 இடங்களில் லோக் ஆயுக்தா அதிரடி ரெய்டு!

By KU BUREAU

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கர்நாடகா மாநிலம் முழுவதும் 56 அரசுத்துறை அதிகாரிகள் வீடுகளில் இன்று அதிகாலையில் இருந்து லோக்ஆயுக்தா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வால்மீகி வளர்ச்சிக் கழக முறைகேடு தொடர்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர் இந்த நிலையில், கர்நாடகா முழுவதும் அரசுத்துறை அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா இன்று ரெய்டு நடத்தி வருகிறது. கோலார் தாசில்தார் விஜின்னா வீட்டிலும், அட்டஹாசனில் கிரேடு-1 செயலாளர் என்.எம்.ஜெகதீஷ் வீட்டிலும், ஹாசனில் கிரேடு-1 செயலாளர் வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மைசூரில் உள்ள நீர்ப்பாசனத் துறையின் கண்காணிப்பாளர் பொறியாளர் மகேஷ் வீட்டின் மீது லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கோகுலம் அலுவலகத்தில் கோப்புகள் சரிபார்ப்பு பணியும் நடந்து வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பின்னணியில் இந்த ரெய்டு நடந்து வருவதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாண்டியாவில் ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் சிவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாகமங்கலா தாலுகாவில் உள்ள இஜ்ஜலாகாட்டில் சிவராஜுக்கு சொந்தமான பண்ணை வீடு, அவரின் தந்தை வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. லோக் ஆயுக்தா எஸ்பி சுரேஷ்பாபு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்த ரெய்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒரே நேரத்தில் 56 இடங்களில் ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE