தொடர் மழை; நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து: சீரமைக்கும் பணிகள் தீவிரம்

By மு.அஹமது அலி

தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லக்கூடிய சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்து சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக கொடைக்கானலில் சவரிக்காடு பகுதியில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை முற்றிலுமாக சரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த பழனி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக, மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இன்னும் ஓரிரு தினங்களில் கனரக வாகனங்கள் பயணிக்கும் வகையில் சாலை சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE