பட்டு, வேட்டி சட்டையுடன் மகனோடு சாலையில் ஒய்யார நடை: வைரலாகும் குமரி எஸ்.பி-யின் புகைப்படம்

By காமதேனு

கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் ஆச்சரிய சம்பவங்களை நிகழ்த்தும் நேர்மையான அதிகாரி! கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியான கையோடு தன் மகன் நிஷ்விக்கை அரசுப்பள்ளியில் சேர்த்து ஆச்சரிய மூட்டினார். அவரது மகன் நிஷ்விக் இப்போது கவிமணி அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். இதேபோல் கரிகிரண் பிரசாத் எஸ்.பியாக பதவியேற்ற முதல்நாளில் தன் தாய், தந்தையருக்கு சல்யூட் அடித்து பணியைத் தொடங்கியும் நெகிழ்ச்சியூட்டினார்.

அந்தவகையில் நேற்று விநாயகர் சதுர்த்தியன்று அவரது மகன் நிஷ்விக் தனக்கு வீட்டில் பிள்ளையார் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்க, உடனே அவரே அழைத்துப்போய் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மழை ஒருபக்கம் வெளுத்துவாங்க பட்டு, வேட்டி சட்டையில் எஸ்.பியும், அவரது மகனும் பிள்ளையார் சிலை வாங்கிவிட்டு சாமானிய பொதுமக்களைப் போல் மிகச்சாதாரணமாக நடந்துவரும் காட்சி வாட்ஸ் அப்களில் வைரலானது.

இதையே கெட்டியாகப் பிடித்துக்கொண்ட இந்து அமைப்புகள் எஸ்.பியை சமூகவலைதளங்களில் பாராட்டி வருவதோடு, ஆட்சியரும் இதேபோல் அவர் வீட்டு விநாயகர் சதுர்த்தியை போஸ்ட் போட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் பதிவுகளும் பறக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE