தமிழக அமைச்சர்கள் 10 பேருக்கு தொடர்ந்து டார்ச்சர்: சிக்கிய பி.டெக் பட்டதாரி பரபரப்பு வாக்குமூலம்

By ரஜினி

தமிழக அமைச்சர்களுக்கு போன் மூலம் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக அமைச்சர்களான சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி, நாசர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் உதவியாளர்கள் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அமைச்சர்களை தொடர்பு கொண்டு தனது மணிபர்சை காணவில்லை எனவும், போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுவதாகவும், பிறகு என்ன அரசாங்கம் நடத்துறீங்க, ஓட்டு கேட்டு மட்டும் வந்தீங்களே என கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அந்த நபர் திருமங்கலம் பகுதியில் இருப்பதாகவும், அவரது புகாரை விசாரிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ந்த போன அண்ணாநகர் தனிப்படை போலீஸார், மர்ம நபர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து செல்போன் சிக்னல் உதவியுடன் ஜெ.ஜெ நகரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த வாலிபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் தஞ்சை மாவட்டம், கரந்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் (26) என்பது தெரியவந்தது. இவர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்து முடித்துவிட்டு, 2017-ம் ஆண்டு முதல் வேலை தேடியும் கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். கடந்த 14.08.2022 அன்று சென்னைக்கு வந்து ஜெ.ஜெ நகர் ரேடியோ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி, ஸ்விக்கியில் டெலிவரி பாயாக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேம் குமார் தூங்கி கொண்டிருந்த போது அவரது மணிபர்சை யாரோ திருடு சென்றதும், அதில் அவருடைய ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் 2,000 ரூபாய் இருந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரது மணிப்பர்சை திருடி சென்ற நபர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு 2500 ரூபாய் கொடுத்தால் மணிபர்சை தருவதாக கூறியதால் ஆத்திரமடைந்து அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காந்தி, நாசர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரின் தொடர்பு எண்களை கூகுள் மூலமாக தேடி எடுத்து தொடர்பு கொண்டதுடன், மின்னஞ்சல் மூலமாகவும் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE