விபசாரத் தொழில் போட்டியால் பெட்ரோல் குண்டு வீச்சு: சிக்கியவர் வாக்குமூலத்தால் போலீஸார் அதிர்ச்சி

By ரஜினி

சென்னையில் தனியார் தங்கும் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபசாரத் தொழில் போட்டி காரணமாக அவர் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை வடபழனி கங்கப்பா நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதே பகுதியில் தனியார் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு டூவீலரில் வந்த இருவர், திடீரென இரண்டு பெட்ரோல் குண்டுகளை விடுதிக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் மற்றும் அங்கிருந்த கண்ணாடி சேதமடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் தமீம் அன்சாரி அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அத்துடன் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் இருவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து கே.கே நகரில் பதுங்கி இருந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத்(36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வினோத் மீது கூடுவாஞ்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் இருப்பதும், விபசார புரோக்கர் தொழில் செய்து வரும் வினோத், கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொழிலுக்காக விடுதிக்கு பெண்களை அனுப்பி வந்ததும் தெரிய வந்தது.

சமீபத்தில் வினோத் தனியாக தொழில் தொடங்கியதால் இந்த விடுதியின் தொழில் பாதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விடுதியின் உரிமையாளர் தமீம் அன்சாரி தொடர்ந்து வினோத்தை மிரட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த வினோத், மதுரவாயல் கொலை வழக்கு கூட்டாளியான கலை என்பவருடன் சேர்ந்து விடுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள கலையை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE