ஆய்வில் அதிர்ச்சி : 828 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு @ திரிபுரா

By KU BUREAU

திரிபுரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்க கழகங்களைச் சேர்ந்த 828 மாணவர்கள் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்ஐவி. என்ற எய்ட்ஸ் நோய் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கக்கூடிய நிலையில், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பதும் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும். இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் 828 பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எச்ஐவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அம்மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. அப்போது பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையானது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 828 மாணவர்களுக்கு எச்ஐவி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் அதிகாரி கூறுகையில், "திரிபுரா மாநிலத்தில் பரிசோதனை செய்ததில் எச்ஐவி பாசிட்டிவ் உள்ள 828 மாணவர்களை இதுவரை மீட்டுள்ளோம். அவர்களில் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர். 47 பேர் உயிரிழந்தனர். இதில் பல மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு திரிபுராவில் இருந்து படிக்க சென்றிருக்கிறார்கள்.

அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு போதைப் பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் தான் எய்ட்ஸ் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE