வயதான தம்பதியரைத் தாக்கி நகைகள் கொள்ளை : 5 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்த போலீஸார்

By KU BUREAU

வயதான தம்பதியின் வீட்டில் கொள்ளையடித்த மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஜட்டி கொள்ளையர்கள் நான்கு பேரை தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மங்களூரு கபிகாடு அருகே உள்ள கோட்டேனியில் வயதான தம்பதியான விக்டர் மென்டோன்சா (வயது 71), பெட்ரிசியா மென்டோன்சா (60) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று இவர்கள் வீட்டுக்குள் ஜட்டி, பனியன் அணிந்து முகத்தில் எண்ணெய் பூசிய 4 கொள்ளையர்கள் புகுந்தனர். விக்டர் வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரங்கள் மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களையும், காரையும் அக்கும்பல் திருடியதுடன், தம்பதியரையும தாக்கி விட்டுத் தப்பிச் சென்றது.

இது குறித்து விக்டர் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடத் துவங்கினர். முல்கி பேருந்து நிலையம் அருகே விக்டரின் கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரை அங்கு நிறுத்தி விட்டு கொள்ளையர்கள் கர்நாடகா போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பாக கேஎஸ்ஆர்டிசி அதிகாரிகள், தனியார் ஓட்டுநர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பெங்களூரு செல்லும் பேருந்துகள் குறித்து விசாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து குறித்து விசாரித்த போலீஸார், ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இது குறித்த தகவலைத் தெரிவித்தனர். இதனையடுத்து ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் அருகே பேருந்தை மறித்து, சந்தேக நபர்களை டிஎஸ்பி மற்றும் அவரது குழுவினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைர நகைகள், கைக்கடிகாரங்கள், பணம், செல்போன்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் போலீஸார் மீட்டனர். விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜு சிங்வானி (24), மயூர் (30), பாலி (22), விக்கி (21) என்பது தெரிய வந்தது.

இவர்கள் ஜட்டி, பனியன் அணிந்து,உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு தொடர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த தம்பதியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த 5 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த மங்களூரு, ஹாசன் மற்றும் சக்லேஷ்பூர் காவல் துறையினரின் கூட்டு நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE