வால்மீகி வளர்ச்சிக் கழக ஊழல்: மாநகராட்சி தலைவர் வீட்டில் அதிரடி சோதனை!

By KU BUREAU

கர்நாடகாவில் வால்மீகி வளர்ச்சிக் கழகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக மாநகராட்சி தலைவர் பசனவுடா தாடால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த பல கோடி ரூபாய் மோசடி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரன், மாநகராட்சி தலைவர் பசனகவுடா தாடால் ஆகியோரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை செய்தது. சுமார் 8 மணி நேரமாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநகராட்சிக்கு சொந்தமான 187 கோடி ரூபாயை அனுமதியின்றி பணப்பரிமாற்றம் செய்ததாக இவர்கள் இருவரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தியது. கணக்கு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மே 26-ம் தேதியன்று பணத்தை மாற்றுமாறு பலர் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி ஒரு குறிப்பை எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் பழங்குடியினர் நலன், இளைஞர் அதிகரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராய்ச்சூர் மாவட்டம் ஆஷாபூர் சாலையில் உள்ள பசனவுடா தாடாலின் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE