தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சம்பந்தர் சிலை: அமெரிக்காவில் இருப்பதை உறுதி செய்த போலீஸ்!

By ரஜினி

தமிழகத்திலிருந்து கடந்த 1971-ம் ஆண்டு திருடப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள பிரபல ஏல மையத்தில் இருப்பதைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் கடந்த 1971-ம் ஆண்டு கோயில் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பார்வதி சிலை, சம்பந்தர் சிலை, கிருஷ்ண கலிங்க நர்த்தனம் சிலை, அகஸ்தியர் சிலை, அய்யனார் சிலை ஆகிய 5 உலோக சிலைகள் திருடப்பட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கே.வாசு என்பவர் புகார் அளித்தார்.

மேலும் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், உடனடியாக கண்டுபிடிக்கக்கோரி அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில் திருடு போன சிலைகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்தின் வலைதளத்தில் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் திருடுபோன சம்பந்தர் சிலையின் புகைப்படம் இருப்பதைக் கண்டுபிடித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தங்களிடம் உள்ள சிலையின் புகைப்படத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது அது நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட 34.3 செ.மீ உயரம் கொண்ட சம்பந்தர் சிலை என்பதைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் உறுதி செய்தனர்.

இந்தியா, அமெரிக்க அரசுகளுக்கு இடையேயுள்ள குற்ற விஷயங்களில் பரஸ்பர உதவி புரிதல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலையை மீட்டுக்கொடுக்கும்படியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். ஏற்கெனவே இதே கோயிலில் திருடப்பட்ட 12- ம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்வதி சிலையும் அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல மையத்தில் இருப்பதைக் கண்டுபிடித்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட பார்வதி சிலையுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பந்தர் சிலையும் கூடிய விரைவில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரன் சிவன் கோயிலில் வைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE