ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் திடீர் பணி இடைநீக்கம்: அதிர்ச்சி தரும் பின்னணி

By ரஜினி

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே கடந்த 16-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை, ரவுடி கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜாம்பஜார் போலீஸார், தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா, தேவா உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கத்தி,3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை, ரவுடி சூர்யா மற்றும் தேவா ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூர்யா மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஸ்டாலினை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூர்யா மீது அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் கொலை ,கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஆட்டோ ராஜா மற்றும் சூர்யா இடையே கஞ்சா விற்பதில் தகராறு ஏற்பட்டு வருவதாகவும், இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் முன்கூட்டியே காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஆய்வாளர் ஸ்டாலின், உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியமாக நினைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் ஆட்டோ ராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆய்வாளர் ஸ்டாலினை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE