கலெக்டர்கள், சென்னை மேயரைத் தொடர்ந்து டிஜிபி படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து பணம் பறிப்பு: அதிர்ந்து போன சைலேந்திரபாபு

By ரஜினி

வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியில்( முகப்பு) வைத்து பணம் பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளா்.

சமூக வலைதளங்கள் வாயிலாக காவல்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஈரோடு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மேயர் பிரியா ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் போடுமறு கூறி பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு புகைப்படத்தை பயன்படுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட முயலுவதாக தமிழக காவல்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் டிபியாக வைத்து மோசடி கும்பல் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் வழக்கம் போல் பேசத் தொடங்கி, அதன் பிறகு அமேசான் கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்ப வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம் என அனைத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் டிஜிபி தெரிவித்து உள்ளார். மேலும் இது போன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE