சென்னை தனியார் வங்கியில் நகைக்கொள்ளை: கோவை நகைக்கடை உரிமையாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

By ரஜினி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் வழங்கும் பெட்பேங்க் கோல்ட் லோன்ஸ் நிறுவனத்தில் கடந்த 13-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து,, ஊழியர்களைக் கட்டிபோட்டு கத்தி முனையில் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கூடுதல் ஆணையர் அன்பு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரும்பாக்கம் போலீஸார், ஊழியர்களை மீட்டு, சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர். மேலும், நகைக்கடன் வழங்கும் நிறுவன மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதே நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றி வரும் முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார், 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28), சந்தோஷ் (30) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்டு நகைகளை விற்க உதவிய செந்தில் குமரன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் கொரட்டூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அதேபோல மற்றொரு முக்கிய குற்றவாளியான சூர்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார். மேலும் முருகன், தங்கத்தை விற்க உதவிய செந்தில் குமரன் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய கேப்ரியல், மணிகண்டன் மற்றும் கஜேந்திரன் ஆகிய 3 பேரைப் பிடித்து அரும்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொள்ளையர்கள் கோவையில் உள்ள ஸ்ரீவத்சவ் என்ற நகைக்கடை உரிமையாளரை தங்க நகை விற்க அணுகியதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார், ஸ்ரீவத்சவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சரணடைந்த சூர்யாவிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள சூர்யாவின் நண்பர் ஒருவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ தங்க நகைகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் கொள்ளைபோன 31.7 கிலோ தங்க நகைகளில் 28 கிலோ தங்க நகைகள் தனிப்படை போலீஸாரால் மீட்கப்பட்டது. மீதமுள்ள 3.700 கிலோ நகைகளைக் கொள்ளையர்கள் உருக்கிவிட்டார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE