நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து : பெங்களூருவில் பரபரப்பு!

By KU BUREAU

30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) பேருந்து இன்று அதிகாலை ரோஸ் கார்டனில் இருந்து சிவாஜி நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். எம்.ஜி. சாலையின் அனில் கும்ப்னே சிக்னலில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். இதன் பின் பேருந்தை அவர் இயக்க முயற்சி செய்தார். ஆனால், இரண்டு, மூன்று முறை அவர் முயற்சித்தும் பேருந்தை இயக்க முடியவில்லை.

அப்போது திடீரென பேருந்தின் இன்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பேருந்து தீயில் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE