"ஸ்டாலின், சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் எனப் பேசி இருப்பது, அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார்.
மதுரை கல்லூரி மைதானத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று துவக்கி வைத்தார். போட்டிகளை துவக்கி வைத்த ஆர்.பி. உதயகுமார் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசியக்கொடிகளை பரிசாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "இன்றைக்கு 1 கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ள தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதை மருந்து பயன்படுத்தும் தொடர்புள்ள நிலையில் உள்ளதாக புள்ளி விபரம் நமக்கு வந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும், கவலையும் அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்திலேயே தமிழகத்தில் போதை பொருள் அதிகரித்துவிட்டது. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார். திமுகவினர் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஏமாற்றி வாக்குகளைப் பெற்றனர். ஆனால், மசோதாவை மட்டும் நிறைவேற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேசத்தைக் காப்பாற்ற லட்சுமணன் என்ற ராணுவ வீரர் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார். தற்போது, அவரின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் 20 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடும்ப சூழ்நிலை கருதி மத்திய, மாநில அரசுகள் அவரது சகோதரருக்கு வேலை வாய்ப்பினை வழங்கிட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "போதை ஒழிப்பில் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுகிறார், அதற்கு அவசியம் இல்லை. சட்டத்தின் துணை கொண்டு காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கினால் போதும், ராணுவ கட்டுப்பாட்டோடு போதை பொருட்களை ஒழிக்க முடியும். ஸ்டாலின் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என பேசி இருப்பது அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக எதிர்க்கட்சித் துணை தலைவர் என்ற முறையில் எனக்கு அது கவலை அளிக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கிறது. ஏனென்றால் தமிழக அரசும், தமிழக முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமமானது. ஆனால், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மிகவும் திறமை மிக்கவர்கள், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பேணிக் காப்பார்கள்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெற்றோர்கள் ஊர்மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க முற்பட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. மாணவியின் பெற்றோர் அனுமதி கேட்டால் தராமல், அப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என பயப்படும் அளவிற்கு இருப்பது காவல்துறையின் கையாலாகாத தனத்தை காண்பிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
திமுக பிரமுகர் அரிவாளை காண்பித்துக் கொண்டு மக்களை விரட்டுவது என்பது அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது அமளிக்காடாக மாறி உள்ளது. இதனால், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது" என்றார்.